தூத்துக்குடி: சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் வி.வி.டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் தனியார் ஆலைக்கு முறைகேடாக தாது மணல் கடத்தி வந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி, நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சமூக செயற்பாட்டாளர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளித்தனர்.
முன்னதாக நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கடந்த 2017ஆம் ஆண்டு தாதுமணல் எடுத்தல், கனிமவளம் சுரண்டப்படுவது ஆகியவற்றைத் தடுக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வி.வி. நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்ட தாதுமணல் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தனியார் குடோன்களில் முறைகேடாக இருப்பு வைக்கப்பட்டிருந்த தாதுமணல் அளவிடப்பட்டு, அதை பயன்பாட்டுக்காக எடுத்துச் செல்வதற்கோ, விற்கவோ தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், வி.வி. டைட்டானியம் பிக்மெண்டஸ் நிறுவன பயன்பாட்டுக்காக பூட்டப்பட்டிருந்த தாதுமணல் குடோன்களின் சீல் உடைக்கப்பட்டு, அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த தாதுமணல் மூட்டைகள் முறைகேடாக லாரிகளில் கடத்தி செல்லப்பட்டன.
இதுகுறித்து அறிந்து நாங்கள், காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தன் பயனாக காவல் துறையினர் சோதனை நடத்தி கடத்தலில் ஈடுபட்ட ஐந்து லாரிகளின் ஓட்டுநர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விவி நிறுவன உரிமையாளர் பெயர் குறிப்பிடாமல் அவர் உள்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் தாதுமணல் கடத்தலில் ஈடுபட்டதாக விவி நிறுவன உரிமையாளர் பெயரை, வாக்குமூலத்தில் கூறியும், வி.வி.நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் பெயரைக் குறிப்பிடாமல் பெயரளவுக்கு மட்டும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், 2017ஆம் ஆண்டு தனியார் குடோன்கள் சீல் வைக்கப்படும்போது, அலுவலர்களால் அளவிடப்பட்டு குறிக்கப்பட்ட தாதுமணல்கள் இருப்பு அளவு என்னவோ அது தற்போதும் இருக்கிறதா என சரிபார்க்கவேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.