தூத்துக்குடி கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பிரிகேஜி (Pre-kg) முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு, தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 30 பிள்ளைகள் இருந்த நிலையில், தற்போது 800 பிள்ளைகள் படிக்கின்றனர்.
மேலும், 40 ஆசிரியைகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உள்ள நிலையில், பள்ளி ஆசிரியர்களுக்கு சரிவர சம்பளம் தரவில்லை என்று பள்ளி முன்பு ஆசிரியர்கள் இன்று (அக்.10) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு ஆசிரியை ஜெயலெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தூத்துக்குடி, விக்டோரியா பள்ளியில் ஆசிரியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, தருகிறோம் எனக் கூறிய நிர்வாகம் இன்னும் சம்பளம் தரவில்லை.
நாங்களும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக அவற்றைப் பொறுத்துக்கொண்டோம். ஆனால், இன்றுவரை 2 மாத சம்பள பாக்கியில், பாதிக்கும் குறைவாக தந்துள்ளனர். இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது, தகாத வார்த்தையில் பேசுகிறார்கள்; தரக்குறைவாக பேசுகிறார்கள். பள்ளியில் இருக்க விருப்பம் இருந்தால் இருங்கள். இல்லையெனில் பள்ளியை விட்டு வெளியேறுங்கள்' என மிரட்டுகின்றனர்.
இப்பள்ளியில் ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் மிரட்டலுக்குள்ளாகும் சூழ்நிலையில், குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும் என ஆதங்கத்துடன் மேலும் அந்த ஆசிரியை கூறினார். காலாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் கழித்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு இலவச முட்டை, பால், ரொட்டி வழங்கும் நெல்லை விஜய் மக்கள் இயக்கத்தினர்