தூத்துக்குடி: கரோனா உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (58), எனும் இரும்பு பட்டறைத் தொழிலாளி இன்று அதிகாலை 2.30 மணிளவில் உயிரிழந்தார்.
இவர், கருப்புப் பூஞ்சை நோயின் தாக்கத்தினால் தான் இறந்தார் என்ற தகவல் பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்த முதல் நபர் சௌந்தர்ராஜன் எனத் தகவல் வெளியான நிலையில், மாவட்டம் முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் பற்றிய பயம் தொற்றிக்கொண்டது.
உடனடியாக, இவரின் இறப்பு குறித்து விளக்கமளித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், "கரோனா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சௌந்தர்ராஜன் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றினால் இறக்கவில்லை. அவர் கரோனா எதிர்வினை பாதிப்பு காரணமாகவே இறந்தார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் கண் மருத்துவத்துறையின் சிறப்பு மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார். மேலும் அரசு விதிமுறைகளின்படி அவருக்கு கரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு நோய்த் தொற்று இல்லை என கண்டறியப்பட்டிருந்தாலும் உருமாறிய கரோனாவால் அவரது நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் மருந்து ஏற்பு திறனின்றி அவர் உயிரிழந்தார். எனவே, சௌந்தர்ராஜன் கருப்பு பூஞ்சை நோயினால் இறந்தார் என்பது தவறான தகவல். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறிப்பட்டாலும் அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் நம்மிடம் உள்ளன’ என்றார்.