தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோவில்களில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இன்று (ஜூலை 3) தூத்துக்குடி வந்தனர்.
பெருமாள் கோயிலில் ஆய்வு
இதைத் தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி பெருமாள் கோயிலில் ரூ.3 கோடி செலவில் கல் மண்டபம் அமைக்கும் பணி; ரூ.2 கோடி செலவில் கோயில் உள் சுற்றுச்சுவர், பஞ்சவர்ணம் தீட்டும் பணி, தரைதளம் புதுப்பித்தல்; ரூ.5 கோடி செலவில் புது ராஜகோபுரம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.
அமைச்சரின் அறிவுரை
புது ராஜகோபுரம் பணியினை ஆய்வு செய்தபோது, ராஜகோபுரம் அமைக்கும் பணிகளுக்காக தயார் செய்யப்பட்டிருந்த கருங்கல் வேலைப்பாடுகளை பார்வையிட்டார்.
அப்போது ஒப்பந்ததாரரை அழைத்த அமைச்சர் சேகர் பாபு, கருங்கல் வேலைபாடு பணிகள் உயிரோட்டமற்று இருக்கிறது என்று குற்றஞ்சாட்டி, உடனடியாக பணிகளை திருத்தம் செய்ய மாற்று நபர்களை பணியமர்த்தவும், பழமை மாறாமல் உயிர்ப்புடன் சிலைகளை வடிக்கவும் என்று அறிவுரை வழங்கினார்.
அமைச்சர் உறுதி
இதையடுத்து, ஆய்வின்போது கோயில் திருப்பணியாளர்கள் சார்பில் கோயிலுக்கு நிதி ஆதாரங்களை திரட்டி தருவது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 40 ஆயிரம் பேருக்கு பணி- ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிநிரந்தரம்- சேகர் பாபு