தூத்துக்குடி: சாத்தான்குளத்தைச் சேர்ந்த டேவிட் இன்பராஜ் என்பவரின் மகன் அருண் பரத்தை, 2006ஆம் ஆண்டு மிரட்டல் புகார் குறித்து விசாரிப்பதற்காக சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக அவரை அவரது வீட்டில் வைத்து உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், காவல் நிலையத்துக்கு சென்றதும், வாகனத்தில் இருந்து இறங்கிய அருண் பரத், அங்கு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அருண் பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீகுமார் உள்ளிட்ட காவல் துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அருண் பரத்தின் தந்தை டேவிட் இன்பராஜ், மனித உரிமை ஆர்வலர்கள் ராமச்சந்திரன், ஹென்றி திபேன் ஆகியோர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தனர்.
தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
இந்த மனுவை இன்று (ஆகஸ்ட் 11) விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், அப்போதைய உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை மூன்று மாதங்களில் முடித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு அறிவுறுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.
மற்ற ஐந்து காவல் துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனக் கூறிய மனித உரிமை ஆணையம், அவர்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது.
மேலும், உயிரிழந்த அருண் பரத்தின் தந்தைக்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், அத்தொகையை உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமாரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நடிகை மீரா மிதுன் நாளை விசாரணைக்கு ஆஜராக சம்மன்