தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று இரண்டாவது நாளாக தனது விசாரணையைத் தொடங்கியது.
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இதைப்போல பல்வேறு அமைப்பினரும் மனித உரிமை ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
சிபிசிஐடி மிரட்டலால் சாத்தான்குளம் தொடர்பான வீடியோவை நீக்கிய சுசித்ரா!
அதனடிப்படையில் சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலர் குமார் தூத்துக்குடியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று வந்தார். மனித உரிமைகள் ஆணைய காவல் துணை கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், கடைக்காரர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் தலைமை காவலரும், வழக்கில் முக்கிய சாட்சியான ரேவதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களிடம் நேற்று விசாரணை நடத்தி சாட்சியங்கள் பெற்றார்.
இவ்வேளையில் இரண்டாம் நாள் விசாரணை இன்று தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. இன்று நடைபெறும் விசாரணைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவர் வினிலா, சாத்தான்குளம் காவல் நிலைய தற்போதைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர், கோவில்பட்டி அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன், சாத்தான்குளம் தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் உள்ளிட்டோர் விசாரணைக்கு நேரில் வந்துள்ளனர்.
'சாத்தான்குளம் வழக்கு: உரியவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்' - ஐ.நா. சபை
இதுகுறித்து மனித உரிமைகள் ஆணைய விசாரணை அலுவலர் குமார் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவு அறிக்கைகள் மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் மற்றும் அலுவலர் சுனில் குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறல் இருப்பது தெரியவந்தால் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாளை மதுரை சிறைச்சாலைக்குச் சென்று சாத்தான்குளம் வழக்கில் கைதாகியுள்ள காவலர்களிடம் விசாரணை நடத்த உள்ளேன் எனக் கூறினார்.