வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள அதிக காற்றழுத்தம் காரணமாக புதிதாக உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் வரும் 4ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த மாவட்டங்களில் கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து வடகிழக்கு பருவமழை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் இன்று(டிச.1) ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் மாவட்டத்தில் மழை நீர் தேங்கக்கூடிய பகுதிகள், மழை நிவாரண முகாம்கள், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சென்னை அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் இரண்டு குழுக்களாக மொத்தம் 40-பேர் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளனர்.
வானிலை மையத்தின் எச்சரிக்கைப்படி டிசம்பர் 3-ஆம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டம் கனமழையை எதிர்கொள்ளும். ஆனால் அதற்கு முன்பே தூத்துக்குடி மாவட்டத்தில் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவிசெய்திட நிவாரண முகாம்களும், மீட்புக்குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புரெவி புயலால் பாதிப்பு ஏதாவது ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் 40 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர்.
36 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. 63 நிவாரண முகாம்கள் அமைக்கபட்டுள்ளது. நிவாரண முகாம்களில் பொதுமகளுக்கு தேவையான குடிநீர் உணவு மின்சாரம் கழிப்பறை வசதி மட்டுமல்லாது முகக் கவசங்கள், மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.
நடுக்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 72 படகு மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 64 படகுகள் கரைக்கு திரும்பியுள்ளன.
மீதமுள்ள எட்டு படகுகள் விரைவில் கரைக்கு திரும்புவார்கள். தாமிரபரணி நதி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், புயல் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு இன்று(டிச.1) தூத்துக்குடி வந்துள்ளது. இவர்கள் நாளை(டிச.2) எந்தெந்த இடங்களில் பணியமர்த்தலாம் என்பது முடிவு செய்யப்படும். இது தவிர தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த பயிற்சி பெற்ற காவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த மீட்பு படையினர் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிடமும் மீட்பு பணிக்கு தேவையான 40 அத்தியாவசிய பொருள்கள் இருக்கும். இது தவிர உள்ளூர் காவலர்கள் 1,400 பேரை மீட்பு பணிகளுக்காகவே பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம். மேலும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 140 பேரும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: புரவி புயல் டிச., 4 இல் கரையைக் கடக்கும் - வானிலை ஆய்வு மையம்!