நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரை செய்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
பஞ்சமி நிலம்
நாங்குநேரி தொகுதியில் திமுக எம்எல்ஏ மப்பில் உள்ளார். அவர் முன்னால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கிடக்கின்றன. பஞ்சமி நிலம் முரசொலி அலுவலகத்தில் உள்ளது. அது எல்லோருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, அண்ணா அறிவாலயமும் பஞ்சமி நிலத்தில் உள்ளது. அதில் உள்ள சில இடங்கள் பஞ்சமி நிலம்தான்.
ஜெயலலிதா எண்ணம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் அதனை மீட்க நினைத்தார். ஆனால் அண்ணா சிலை இருந்ததால் அந்த முடிவை அவர் கைவிட்டுவிட்டார். அசூரன் படத்தில் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் ஒடுக்கப்பட்டவராக நடித்துள்ளார். இந்தப் படம் பற்றி பேசினால் ஒடுக்கப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர்கள் வாக்கு கிடைக்கும் என்று அவர் நினைக்கிறார்.
முள்ளிவாய்க்கால் சம்பவம்
நாங்கள் உண்மையை பேசுகிறோம். அனைவரையும் சமமாக நினைக்கிறோம். சிறுபான்மையினரும் எங்களுடன் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ளன. அதனால் முள்ளிவாய்க்காலில் கொத்துக் குண்டு போட்டு கொன்றது போல், அரசியல் குண்டு போட்டு எங்களை வம்பிழுக்கின்றனர்.
நில மீட்பு
நாங்கள் தற்போது தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எந்த சமூகத்தினருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஒடுக்கப்பட்ட நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் அதிமுக என்றும் ஈடுபடாது. அரசின் சொத்தை தன் சொத்தாக நினைப்பது திமுகதான்.
சவால்
திமுக ஆட்சியில் நடந்தது என்ன? இதுதொடர்பாக முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார், தற்போதைய திமுக எம்.பி. ஞான திரவியத்துடன் பொது இடத்தில் வைத்துக்கூட விவாதிக்கத் தயார். தேவையில்லாததை சட்டப்பேரவையில் வசந்தகுமார் பேசுவார். ஆனால், தொகுதிக்கு தேவையானவற்றை கேட்க மாட்டார்.
நாங்குநேரி தொகுதியில் தொழில் வளர்ச்சி ஏற்படாததற்கும் நம்பியாறு திட்டம் செயல்படுத்தப்படாததற்கும் அத்தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவையில் குரல் எழுப்பாததே காரணம். நாங்குநேரி தொகுதியில் திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டத்தையும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் மக்கள் எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும்.
அதிமுக சாதனை
நம்பியாறு திட்டம் தொடர்பாக நாங்குநேரியின் குரலாக வசந்தகுமார் என்றாவது ஒலித்தாரா? நாங்குநேரி தொகுதி கட்டமைப்பு அதிமுக செய்தது. அத்தனை சாலைகளும் பணிகளும் சரிசெய்யப்பட்டுள்ளது. களக்காட்டில் தாமிரபரணி தண்ணீர் கிடைக்காத இடங்களில் கூட தண்ணீர் கிடைக்கும்படி ஆய்வுகள் நடத்திவருகிறோம்.
வெற்றி உறுதி
நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றிபெறுகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெறுகிறார்.
இவர்களின் வெற்றியைத் தடுக்க திமுக பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. மதத்தை இனத்தை தூண்டிவிடுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் செய்தியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிமுக அரசை பாரதிய ஜனதாவின் அடிமை அரசு என்று கூறுகின்றனரே என்று கேள்வி எழுப்பினர்.
திமுக இரட்டை நிலைப்பாடு
இதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, “மாநிலத்தின் தேவைக்காக மத்திய அரசிடம் நிதியை பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்வது இயல்புதான். நாட்டின் பிரதமரை வரவேற்பதில் என்ன தவறு இருக்கிறது? மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் திமுக அங்கம் வகிக்கிறது. இது வேண்டாம் என்று அவர்கள் சொல்ல வேண்டியதுதானே. இந்த நிலையில், பாரதிய ஜனதாவை பற்றி விமரசிப்பது நாடகம் நடிப்பு" எனக் கூறினார்.
காங்கிரசுக்கு பதில்
காங்கிரஸ் தலைவர் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று கூறியது பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு நக்கலாக பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, 'பேப்பரில் எழுதி வைத்து நக்க வேண்டியதுதான். சீனி சக்கரை சித்தப்பா, பேப்பரில் எழுதி நக்கப்பா' என்றார்.
இதையும் படிங்க: சீமான் மட்டும்தான் தமிழனா? ராஜேந்திர பாலாஜி அசத்தல் கேள்வி