முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், வ.ஊ.சி. கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில் நடந்தது.
வ.ஊ.சிதம்பரனார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து 60 நாட்களுக்குள் பயனாளிகளுக்கு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்ச்சியை சேலத்தில் கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அதன்தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களிலும் சேர்த்து ரூ.5 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளார்கள். ஸ்ரீவைகுண்டம், ஏரல் வட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு கருங்குளத்தில் விழா நடைபெற உள்ளது. இந்த திட்டத்துக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. பஞ்சமி நிலம் குறித்து மு.க.ஸ்டாலின் அவராகவே கருத்து தெரிவித்து மாட்டிக்கொண்டார். முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று சிலர் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இது குறித்து முதலமைச்சரும் துணை முதலமைச்சருமே முடிவெடுப்பார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடக்கிற நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி ஒரு மாயை. மக்களை ஏமாற்றி பெறப்பட்ட வெற்றி. அவர்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று விட்டனர். அதன்பின்னர் நடந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் 48 சதவீதம் வாக்குகள் பெற்றோம். அடுத்த நடந்த இரு இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
இதையும் படிங்க : முரசொலி விவகாரம்: வாய்தா வாங்கிய பாஜக பிரமுகர்; விளாசித் தள்ளிய ஆர்.எஸ்.பாரதி!