தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டார். இதில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனை முடிவுகளை விரைவாகவும், துல்லியமாகவும் கணக்கிட உதவும் ரூ.22 லட்சம் மதிப்பிலான தானியங்கி ஆர்.என்.ஏ.பிரித்தெடுப்பான் ஆய்வகத்தை தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”பால் முகவர்கள் காவலர்களுக்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை என்ற அறிவிப்புக்கு பின்னால் அரசியல் பின்னணி உள்ளதாக தெரிகிறது. இக்கட்டான காலத்திலும் அத்தியாவசிய பணிகளை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு அக்கறை கொண்டுள்ளது. ஆகவே பால் முகவர்கள் அச்சப்பட தேவையில்லை” என்று கூறினார்.
சசிகலா நடராஜன் வரும் ஆகஸ்ட் மாதம் விடுதலையாகலாம் என்ற தகவல் வெளியான நிலையில் அரசியல் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தற்போது கரோனா தொற்றை குறைக்கும் பணியில் அரசு முழு மூச்சாக செயல்பட்டுவருகிறது. இப்போது சசிகலா குறித்தெல்லாம் யோசிப்பதற்கு நேரமும் இல்லை, அவசியமும் இல்லை என்றார்.