தூத்துக்குடி: விவசாய சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடுவின் 36ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி விழா கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடைபெற்றது.
நாராயணசாமி நாயுடுவின் உருவப்படத்திற்குச் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் கோவில்பட்டியிலிருந்து கோவை மாவட்டம் வைய்யம்பாளையம் வரையிலான 4ஆம் ஆண்டு தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, பாஜக தலைவர் முருகன், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பேசியுள்ளது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "தேர்தல் நேரத்தில் அவரவருக்கு ஒரு நிலைப்பாடு இருக்கும். எங்கள் நிலைப்பாடு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவுசெய்து அறிவித்துவிட்டோம். அடுத்தவர்கள் சொல்வதை நாங்கள் கவலைப்படப் போவதில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கமல்ஹாசனை பொறுத்தவரை எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அரசியலில் அவர் தடம் பதித்ததுமில்லை, தடம்பதிக்கப் போவதுமில்லை. பதில் சொல்லுகின்ற நேரத்தில் பதில் சொல்கிறோம். சொல்லாமல் இருந்தால் மக்கள் மத்தியில் தவறாக போய் சேர்ந்துவிடும்.
அவரை ஒரு பொருட்டாக நினைத்து பதில் சொல்லவில்லை. கமல்ஹாசன் மட்டுமல்ல; தேர்தல் நேரத்தில் யார் தவறான குற்றச்சாட்டு சொன்னாலும், அதிமுக சார்பில் ஒவ்வொரு தொண்டனும் அதற்குப் பதில் சொல்வார்கள்” என்றார்.