தூத்துக்குடி: பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறக்கூடிய பெண்கள் தங்குவதற்கும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பல்வேறு குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு பெண்கள் வெளியேறுகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் இந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மருத்துவர்கள், பெண்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள் பணியில் இருப்பார்கள்.
இந்த மையம் குறுகிய கால சேவை மையமாக செயல்படும். இதேபோன்று சேவை மையம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு வருகிறது.
கரோனாவால் பெற்றோரை இழந்தோர்
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், தாய், தந்தை இருவரையும் இழந்த பிரிவில் 93 குழந்தைகளும், பெற்றோரில் ஒருவரை இழந்த பிரிவில் 3,409 குழந்தைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்த வைப்புத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் முறைப்படி வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். தொடர்ந்து பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன" என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனாவால் பெற்றோரை இழந்த 3,501 குழந்தைகள் கணக்கெடுப்பு!