மதுரை: கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் கட்டட விதிமுறைகளின்படி கட்டடங்கள் மாற்றி அமைக்கப்படும் போது 'கட்டுமான தொடர்ச்சி சான்றிதழ்' பெற வேண்டும். அதேபோல் கட்டடப் பணிகள் முடிந்த பின்பு 'நிறைவுச் சான்றிதழ்' பெறவேண்டும்.
ஆனால், கோவில்பட்டி பகுதியில் இதனை முறையாக பின்பற்றாமல் பல கட்டடங்கள் மாற்றி அமைப்பது, புதிய கட்டடங்கள் கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு அலுவலர்கள் துணையாக இருக்கின்றனர். இதனைத் தடுக்கக் கோரி அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு
எனவே, 2019 ஆண்டு தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் கட்டடத் துறை சார்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி விதிமுறைகளை தமிழ்நாடு முழுவதும் முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வின் முன் இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.