மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் புதிய மருத்துவ மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத்தினர், தொடர்ந்து ஆறாவது நாளாக போராட்டத்தினை கையில் எடுத்து நடத்தி வருகின்றனர்.
ஆறாவது நாளான நடைபெறும் போராட்டத்தில், மாணவர்கள் மருத்துவர் போன்ற உருவபொம்மையை நாற்காலியில் அமரவைத்து, அதன் வாயைக் கருப்பு துணியால் கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு ரத்து, என்.எம்.சி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவர் தினேஷ் கூறும்போது, “மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ கல்வி மசோதாக்களை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இது முறையாக மருத்துவம் படித்து வரும் எங்களுக்கும், எதிரானது. நெக்ஸ்ட் தேர்வு தேவையில்லாததால் அதை திரும்பப்பெறவேண்டும்.
மருத்துவர்களிடம் பயிற்சியில் உதவியாளராக இருக்கும் செவிலியர்கள் கிராமப்புறத்தில் ஆரம்ப நிலை மருத்துவம் பார்க்கலாம் என்ற மசோதாவையும் திரும்பப் பெறவேண்டும்” என்றார் .
மேலும் தூத்துக்குடி இந்திய மருத்துவர் சங்க கிளையின் தலைவர் அருள் பிரகாஷ் கூறும்போது, “அகில இந்திய அளவிலான இந்த ஆர்ப்பாட்டம் கடந்த ஆண்டுமுதல் நடைபெற்று வருகின்றது. இந்த புதிய மசோதாவில் மருத்துவத் துறையில் உள்ள ஓட்டுநரைக் கூட, மருத்துவம் பார்க்கலாம் என்பது சரியாகாது. மருத்துவர்களும், மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம். விரைவில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.