நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளன. பொதுமக்களும் இதை முழுமனதுடன் வரவேற்று வீடுகளுக்குள் மக்கள் முடங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் தூத்துக்குடியில் நடைபெறவிருந்த சில திருமணங்கள் மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும் சில திருமணங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை ஏற்று முக்கிய உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த லிங்கம்-பார்வதி தம்பதியரின் மகனான சங்கருக்கும், வடக்கு தாமரைக் குளத்தைச் சேர்ந்த விஜயகுமார்-கிரிஜா தம்பதியின் மகளான சிவசங்கரிக்கும் தூத்துக்குடி சிவன் கோயிலில் வைத்து இன்று திருமணம் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. மக்கள் ஊரடங்கு உத்தரவையொட்டி சிவன்கோயிலில் திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இதனால் சங்கர்-சிவசங்கரியின் திருமணம் தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் மிக எளிமையான முறையில் முக்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்தின்போது கரோனா வைரஸ் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக மணமக்கள் முகக்கவசம் அணிந்து கொண்டனர். மணமகன் சங்கர் முகக்கவசம் அணிந்தவாறு மணமகள் சிவசங்கரிக்கு பெரியோர்கள் முன்னிலையில் தாலி கட்டினார்.