கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் கொடியேற்றத்தினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜையும், அதையடுத்து அம்பாளுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.
பின்னர் இன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கொடியேற்றமும் அதைத் தொடர்ந்து நந்தி, பலிபீடம், கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
இன்று இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜனகல்யாண் திருப்பதி ராஜா, வணிக வைசிய சங்க செயலாளர் பழனி குமார், தொழிலதிபர் மகாலட்சுமி சந்திரன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, 25ஆம் தேதிவரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார். விழா ஏற்பாடுகளைச் செயல் அலுவலர் ரோஷினி, உதவி ஆணையர் ரோஜாலிசுமதா ஆகியோர் செய்துவருகின்றனர்.