தூத்துக்குடி: தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தூத்துக்குடி மாநகரைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் பலர் படித்து வருகின்றனர்.
இவ்வாறு படிக்கும் மாணவிகளைப் பள்ளி வாகனங்கள் மூலம் தினமும் பள்ளிக்கு ஏற்றி வருவது வழக்கம். அந்த வகையில், இன்று (செப்.13) காலை தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூர், தருவைகுளம், தாளமுத்து நகர், உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து சுமார் 80 மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் வந்து கொண்டிருந்தது.
இந்த வாகனமானது, தூத்துக்குடி பூபால்ராயபுரம் அருகே வந்து கொண்டிருக்கையில் திடீரென பள்ளி வாகனத்தின் இன்ஜினில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வெளியேறியது. இந்தப் புகைமூட்டமானது பேருந்திலும் புகுந்ததால் பேருந்தில் இருந்த இரண்டு மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.
உடனடியாக வாகனத்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பின் மாணவிகளை பொதுமக்கள் உதவியுடன் பேருந்தில் இருந்து இறக்கி, மயக்கமடைந்த இரண்டு மாணவிகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டு மற்றொரு பள்ளி பேருந்து கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் உதவியுடன் மாணவிகளை பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடியில் பள்ளி வாகனத்தில் திடீரென்று கட்டுக்கடங்காத புகை ஏற்பட்டு மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பள்ளி வாகன ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: திருமண நாளில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்...