தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றிய, சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி ஆலயத்திற்குள் மட்டும் விழா நடத்தப்பட்டது. தற்போது, கரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இந்தாண்டு ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா கடந்த 6- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளும் நற்கருணை ஆசீர்வாதம், சிறப்பு திருப்பலி ஆகியவை நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று அதிகாலை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தேரடி திருப்பலி நடத்தி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருத்தேர் பவனி நடைபெற்றது.
விழாவினை முன்னிட்டு கோவில்பட்டியில் இருந்து காமநாயக்கன்பட்டிக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: டாக்டர் சரவணனின் மனவேதனை வரவேற்கத்தக்கது.. ஆர்.பி.உதயகுமார்