தூத்துக்குடி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று (மார்ச் 15) வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (மார்ச் 14) இரவே கோவில்பட்டி வந்தார்.
தொடர்ந்து அவர், செண்பகவல்லி அம்பாள் கோயிலில் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நான் போட்டியிடுகிறேன். கோவில்பட்டி தொகுதி மக்கள் எனக்கு சிறப்பான வெற்றியைத் தேடித் தருவார்கள் என நம்புகிறேன். தமிழ்நாடு அரசுக்கு ரூ. 7 லட்சம் கோடி கடன் உள்ளது. இலவசத் திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலைதான்.
இலவசங்கள் கொடுக்கிறேன் என மக்களை ஏமாற்றுவதைவிட அவர்கள் சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்ய, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம். குறிப்பாக, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது, வருங்கால தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்.
தமிழ்நாடு மக்கள் தன்னிறைவு பெற்று வாழ வேண்டுமென்றால் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரவேண்டும். அதனை நிச்சயமாக நாங்கள் செய்துதருவோம். அமமுகவின் தலைமையில் தேமுதிக 60 இடங்களில் போட்டியிடுகிறது. எங்களது தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என அறிவித்துள்ளோம். புதிய மது தொழிற்சாலைகளைக் கொண்டு வரமாட்டோம். தற்போது, உள்ள ஆலைகளையும் படிப்படியாக மூடுவோம் என கூறியுள்ளோம். தேர்தல் அறிக்கையில் உள்ள 100 திட்டங்களில் பூரண மதுவிலக்கு முக்கியமான திட்டமாக அறிவித்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும்: அமைச்சர் கடம்பூர் ராஜு