தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் சுற்றுவட்டார பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகள் விவசாய நிலங்களின் வழியே மேற்கொள்ளப்படுவதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
ஆனால் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் பணி நடைபெற்றுவருவது விவசாயிகளுக்கும் அலுவலர்களுக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் விவசாயிகளின் அனுமதியின்றி அப்பகுதியில் வாழைத் தோட்டத்தை சேதப்படுத்தி எண்ணெய் நிறுவனத்தினர் எரிவாயு குழாய் பதித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர். ஆனால் விவசாயிகளின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறையினர் எண்ணெய் நிறுவனத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பொட்டல்காடு, குலையன்கரிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 14) கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கண்டன கோஷங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும் தங்களது எதிர்ப்பையும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து திமுக ஒன்றிய கவுன்சிலர் ஆஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பொட்டல்காடு பகுதியில் விவசாய நிலங்களின் வழியே மேற்கொள்ளப்படும் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை அரசு உடனடியாக கைவிட வேண்டும். பொட்டல்காடு விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஊர் பொதுமக்கள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
வரும் 16ஆம் தேதி கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மாற்றுப்பாதையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கலவரம் போன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.