தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே மேட்டு பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி(64). இவர் குடும்பத்துடன் மதுரையில் வியாபாரம் செய்து வசித்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமாக குளத்தூர் கு.சுப்பிரமணியபுரம் பகுதியில் சுமார் 10.95 ஏக்கர் நிலம் விற்பனை செய்வதற்காக தடையில்லா சான்று பெற மனு அளித்துள்ளார். இந்த மனு விசாரணைக்காக, குளத்தூர் கீழ்பாகம் விஏஓ உமேஷ் குமாரிடம் வந்தது.
அவர் விசாரணையை முடித்து வருவாய் ஆய்வாளரிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை பரிசீலித்த வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன், சம்பந்தப்பட்ட முனியசாமியை அழைத்து தனக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வீதம் 10.95 ஏக்கர் நிலத்துக்கு ரூ.3.30 லட்சம் கொடுத்தால்தான் தடையில்லா சான்று வழங்குவேன் எனக் கேட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து முனியசாமி தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்துக்கான நோட்டுகளை முனியசாமியிடம் வழங்கினர். பணத்தைப் பெற்றுக் கொண்ட முனியசாமி வருவாய் ஆய்வாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, தான் அருப்புக்கோட்டையில் இருப்பதாகவும் பணத்தை, அலுவலகத்தில் உள்ள கீழ்பாகம் விஏஓ உமேஷ் குமாரிடம் கொடுக்கும்படியும் வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் கூறியுள்ளார். இதையடுத்து முனியசாமி குளத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் உமேஷ் குமாரிடம் ரூ.3 லட்சத்தை வழங்கிவிட்டு அதனை வருவாய் ஆய்வாளரிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் மீதமுள்ள ரூ.30,000 எங்கே எனக் கேட்டுள்ளார்.
அதற்கு முனியசாமி அதனையும் தான் விரைவில் தருவதாகப் பதிலளித்துள்ளார். இந்நிலையில் குளத்தூர் கீழ்பாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தின் அருகே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விஏஓ உமேஷ் குமாரை லஞ்ச பணத்துடன் கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அருப்புக்கோட்டையிலிருந்த வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகனையும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் கைது செய்து அழைத்து வந்து அவரையும் விசாரணை செய்தனர். சுமார் 3 மணி நேரம் அலுவலகத்தில் சோதனையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: தலைகீழாக நின்று நூதன முறையில் ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டம்!