தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் ஆறாவதுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி வள்ளியம்மாள். சண்முகத்திற்கும்- வள்ளியம்மாளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சண்முகம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
அதே தொழிற்சாலையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிய செல்வி என்பவரின் மகன் முருகேசனுக்கும், சண்முகத்தின் மனைவி வள்ளியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த சண்முகம், வள்ளியம்மாளையும் முருகேசனையும் கண்டித்துள்ளார். ஆனால் அதன் பிறகும் அவர்களின் உறவு தொடர்ந்ததாகத் தெரிகிறது.
சிவகாசி இரட்டை கொலை வழக்கு: கொலையாளிகள் கைது!
இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் வைத்து முருகேசனை அரிவாளால் வெட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து சண்முகம் சிறை வைக்கப்பட்டு பின்பு பிணையில் வெளியே வந்து, முருகேசனுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் முருகேசன், தன் தாய் செல்வியுடன் கூட்டுச் சேர்ந்து சண்முகத்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி 2017ஆம் ஆண்டு ஜனவரி 23 இரவு 11:30 மணியளவில், கையில் மண்ணெண்ணெய் கேனுடன் சண்முகத்தின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சண்முகத்தை அடித்து மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் எரித்தனர். இதில் சண்முகம் உயிரிழந்தார்.
கத்தியுடன் மாணவர்கள் உலா...! போலீஸ் விசாரணை...!
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகேசனையும், செல்வியையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பி.எஸ். கௌதமன் இன்று தீர்ப்பளித்தார்.