தூத்துக்குடி: சிதம்பர நகர் பகுதியில் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எம், சி.பி.ஐ. ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, "செப். 18ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண்மை பிரிவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மூன்று சட்டத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இதை எதிர்த்து மத்திய அமைச்சர் ஒருவர் தன் பதவியை விட்டு விலகியுள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டில் விவசாயி மகன் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அதற்கு ஆதரவளித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது" என்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சங்கரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் செயலாளர் ஞானசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், நிர்வாகிகள் உறுப்பினர்கள் ரசல், முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.