தூத்துக்குடி: திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் எஸ்.என். கோபால் ஜுவல்லரி உள்ளது. இந்த கடைக்கு கடந்த 4 தினங்களுக்கு முன்பு ஒரு பெண் தங்க நகை எடுக்க வந்துள்ளார்.
கடையில் உள்ளவர்கள் அவருக்கு தங்க நகைகளை எடுத்து காண்பித்துள்ளனர். அப்போது அந்தப் பெண் பல மாதிரியான நகைகளை பார்த்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து கடை உரிமையாளர் நகைகளை சரிபார்க்கும் போது கடையில் இருந்த தங்க செயின் ஒன்று கவரிங் செயின் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த கடை உரிமையாளர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆராய்ந்துள்ளார். அதில் நான்கு தினங்களுக்கு முன் வந்து சென்ற அந்தப் பெண் தங்க செயினை எடுத்துக்கொண்டு கவரிங் செயினை வைத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக கடை உரிமையாளர் அந்தப் பெண்ணை பஜாரில் தேடியுள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அந்தப் பெண் நூதன முறையில் கவரிங் செயினை வைத்துவிட்டு தங்க செயினை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் இருந்த தங்கச் செயினை கடை உரிமையாளர் வாங்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண் கவரிங் செயினை வைத்து விட்டு தங்கச் செயினை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதில் அந்தப் பெண் குரும்பூர் திமுக நகரச் செயலாளர் பாலன்.கே.ராஜன் மனைவியும் திமுகவின் அங்கமங்கலம் ஊராட்சி மன்ற 8-வது வார்டு செயலாளர் பொற்கொடி தேவி எனவும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: பெண்கள் கோச்சில் ஏற முயன்றவரை தடுத்த ரயில்வே பெண் காவலருக்கு கத்திக்குத்து...