தூத்துக்குடி: வ.உ.சிதம்பரனார் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக, நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சார்பில் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழு மற்றும் வங்கியின் மூலம் தொழிற்கடன் பெற்று சுயதொழில் புரிவோரின் சாதனை விளக்கக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்கு, முன்னரே அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜக கட்சியினரை உள்ளே அனுமதிக்க மறுத்து வங்கி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு நாகர்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவருமான எம்.ஆர்.காந்தி, அவருடன் வந்த ஆதரவாளர்களையும், உள்ளே அனுமதிக்க மறுத்து வங்கி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த கட்சியினர் வங்கி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியினரை சமாதானப்படுத்திய ஊழியர்கள், நிகழ்ச்சிக்கு வந்திருந்த கட்சியினர் அனைவரையும் உள்ளே அனுமதித்து நிலைமையை சரிசெய்தனர்.