தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகம் திருவிழா வருகிற 12ஆம் தேதி நடைபெறுகிறது. அதை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய அனைத்து விதமான முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், திருவிழாக் காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு 11-06-2022 முதல் 13-06-2022 முடிய மூன்று நாட்கள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர்கள் என எதிர்பார்க்கப்படுவதால், திருக்கோயிலுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திட குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்ய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் ஏற்பாடு செய்ய நகராட்சியினரை ஆட்சியர் கேட்டுக் கொண்டார். திருக்கோயில் வளாகம், குரும்பூர் - குரங்கன்தட்டு நீரேற்று நிலையம், ஆத்தூர் நீரேற்று நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்றும் நிலையம் ஆகிய இடங்களில் 11-06-2022 முதல் 13-06-2022 முடிய மூன்று நாட்கள் தங்கு தடையின்றி மின் விநியோகம் செய்யத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தப்பட்டது.
மூன்று நாட்கள் தரைவழித் தொலைபேசி மற்றும் அலைபேசி இணைப்புகள் முறையாக சரிவர இயங்க உரிய ஏற்பாடுகள் செய்யவும், திருக்கோயிலின் உட்பகுதிகள், வெளிப்பகுதிகள் மற்றும் இதர இடங்களில் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிட காவல்துறையினர் இத்திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
திருச்செந்தூர் நகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் துரித நடவடிக்கை எடுக்கவும், அரசு வாகனங்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் ஆகியவைகள் வடக்கு டோல் கேட்டிலும், பிற வாகனங்கள் தெற்கு டோல் கேட் வாயிலாக வந்து போகவும், பழுதடைந்துள்ள சாலைகள் சரி செய்தல், தெரு விளக்குகள் அனைத்தும் நன்கு இயங்கிட ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பாத யாத்திரையாக பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என்பதால் திருச்செந்தூர் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் மற்றும் ஆவுடையார்குளத்திற்கு போதிய தண்ணீர் திறந்துவிட தாமிரபரணி கோட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் உரிய நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் செல்வதற்கு 120 சிறப்பு பேருந்துகள் உட்பட 220 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், "திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கடலில் குளிப்பவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சர்ப்பக் காவடி எடுத்து வர அனுமதி கிடையாது. அனுமதி மீறி கொண்டு வருபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல்