தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 17ஆம் தேதி ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருவிழாவின் 12 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்.
இத்திருவிழாவின் ஏழாவது திருநாளில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக்கோலத்திலும், எட்டாவது திருநாள் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஆக.26) காலை 6 மணிக்கு நடக்கிறது.
முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்கிறது.
தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர்(கூடுதல் பொறுப்பு) அன்புமணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் விஜயகாந்தின் 70ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்