நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இன்று (பிப்ரவரி 14) வேன் மூலம் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ”கரோனாவிற்கு கடந்த அதிமுக அரசு ஒரு கோடி தடுப்பூசிதான் போட்டது, திமுக ஆட்சியில்தான் 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதனால் இறப்பு ஏதும் இல்லை.
இந்தியாவிலேயே கரோனா வார்டிற்கு நேரிடையாகச் சென்ற ஒரே முதலமைச்சர் நமது முதலமைச்சர்தான், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் உதயநிதி ஓடி ஒளிந்துவிட்டதாகத் தேர்தல் பரப்புரையில் கூறிவருகிறார்.
நீட் தேர்வுக்கான சட்ட மசோதா நிறைவேற்றும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் நான் சட்டப்பேரவையில் அவருக்கு எதிரில்தான் அமர்ந்திருந்தேன், எங்கும் ஓடி ஒளியவில்லை. இப்போதுகூட உங்கள் முன்புதான் பரப்புரை மேற்கொண்டுவருகிறேன்.
கடந்த ஆட்சியாளர்கள் ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டுச் சென்றாலும், கரோனா நிதியுதவி இரண்டு தவணைகளாக ரூ.4000 வழங்கியுள்ளோம். நாங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் உறுதியளித்தபடி குடும்பப் பெண்களுக்கான மாதம் ரூ.1000 நிதி விரைவில் வழங்கப்படும்.
நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், திசையன்விளை, மூலைக்கரைப்பட்டி, ஏர்வாடி, பணகுடி பேரூராட்சிகளைச் சேர்ந்த அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி நீர் கிடைக்க ரூ.275 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
வள்ளியூர் அரசு மருத்துவமனையைத் தலைமை மருத்துவமனையாக மாற்றப்படும். திசையன்விளை பணகுடி பகுதிகளில் மனோ கல்லூரி அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதி, மகளிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - அண்ணாமலை குற்றச்சாட்டு