திருநெல்வேலி(Student protest Based News): நெல்லை டவுன் சாஃப்டர் அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நெல்லை உள்பட தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியிலும் ஒருவித விழிப்புணர்வு ஏற்பட்டு தரமற்ற பள்ளி கட்டடங்களைச் சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்
இந்த நிலையில் நெல்லை மாவட்டம், ரெட்டையார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறை கட்டடம் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்தும் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரக்கோரியும் மாணவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மாணவர்களைப் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு
இந்த நிலையில் தகவல் அறிந்து நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, தற்போது சம்பந்தப்பட்ட ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்கள் கூறியபடி கழிவறைக் கட்டடம் மோசமானதாக இருக்கிறதா, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கிறதா, என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அப்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் அவல நிலை குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி காலமானார்: முதலமைச்சர் குடும்பத்துடன் அஞ்சலி