நெல்லை: கிறிஸ்தவர்களின் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் தொடங்கியது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடு காரணமாக ஆலயத்தின் வளாகப் பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பிரதான சாலைகள், வீடுகளிலும், பல்வேறு தேவாலயங்கள், கிறிஸ்தவ சபையைச் சார்ந்த தேவாலயங்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதேபோல் கடற்கரை கிராமங்களான உவரி, இடிந்தகரை போன்ற கிராமங்களிலும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையுடன் நடைபெற்றது.
மீட்பர் பிறந்துவிட்டார்
பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. வள்ளியூர் புனித பாத்திமா திருத்தலத்தில் பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளார் தலைமையிலும் கிறிஸ்து பிறப்பு விழாவும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.
"கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள். மீட்பர் பிறந்துள்ளார். கிறிஸ்து பிறந்தபோது ஆடு மேய்க்கும் ஆயர்களுக்கு வானதூதர் கூறியது போன்றே அஞ்சாதீர்கள். கரோனா தொற்றிலிருந்து வெளியே வந்துவிட்டோமா என்ற அச்சம் இருந்துவரும் நிலையிலும், பொருளாதார சரிவும் ஏற்பட்ட நிலையில் அஞ்சாதீர்கள் கடவுள் நம்மிடம் பிறந்துள்ளார்" என அந்தோணிசாமி சவரிமுத்து செய்தியாளரிடம் கிறிஸ்துமஸ் செய்தியைத் தெரிவித்தார்.
கிறிஸ்து பிறப்பு ஆடம்பர திருப்பலியும் நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடு காரணமாகப் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஆலயத்தின் வளாக பகுதிகளுக்குள்ளே கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து நண்பர்களுக்கு கேக் வழங்கி கொண்டாடினார்கள்.
இதையும் படிங்க: ரயில்வே பாலத்தில் விரிசல்: ரயில்கள் நிறுத்தத்தால் பயணிகள் அவதி