திருநெல்வேலி: மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று (செப் 26) வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்றன.
அப்போது, அங்கிருந்த அதிமுக, திமுக நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிறிதாக கைகலப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். விசாரணையில் அதிமுக சார்பில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஏழாவது வார்டு கவுன்சிலராக போட்டியிடும் பெண் வேட்பாளர் வேலமுத்து திடீரென போட்டியிடாமல் வாபஸ் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் பகவதி போட்டியின்றி கவுன்சிலராக தேர்வாக உள்ளார். இச்சூழலில், அவருக்கு திமுக சின்னமான உதயசூரியன் வழங்காமல் தேர்தல் அலுவலகம் சார்பில் பிற சின்னம் ஒதுக்கபட்டதாகவும், அதை ஏற்க மறுத்து திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அதிமுகவினருடன் பிரச்னை ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.