திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு சார்பில் வீடு இல்லாமல், ஏழ்மை நிலையில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லையைச்சேர்ந்த வி.ஏ.ஓ மற்றும் தலையாரி இருவரும் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச வீட்டுமனைப் பட்டாவை தங்கள் குடும்பத்தினருக்கே வழங்கிய விவகாரத்தில் ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதாவது, நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) பணியாற்றியவர், மாடசாமி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆரைக்குளம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை, தனது மகள் மகராசி பெயரில் விதிகளைமீறி, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.
அதேபோல், அவரிடம் தலையாரியாக பணிபுரிந்த மந்திரமூர்த்தியின் மருமகள் பெயருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கபட்டதாகத்தெரிகிறது. பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை விஏஓ மாடசாமி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மகளுக்கு வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப்பட்டாவை 20 ஆண்டுகளுக்குப்பிறகே, நத்தம் பட்டவாக மாற்ற முடியும் என்று அரசு விதிமுறை உள்ளது. ஆனால், அந்த விதியையும் மீறி விஏஓ மாடசாமி தனது மகளுக்கு இலவசப்பட்டா வழங்கிய ஒரே ஆண்டில், அந்த பட்டாவை அவரது மனைவி பெயருக்கு பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இது குறித்து அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது விஏஓ மாடசாமி மற்றும் தலையாரி மந்திரமூர்த்தி இருவரும் சட்டத்திற்குப் புறம்பாக தங்கள் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, தனது தந்தை மூலம் கிடைத்த இலவச வீட்டு மனையை மாடசாமியின் மகள், தனது தாய் பெயருக்கு எழுதிக் கொடுத்த பத்திரப்பதிவு ஆவணங்களும் வெளியாகி உள்ளன. எனவே, இதில் சம்பந்தப்பட்ட விஏஓ மாடசாமி மற்றும் தலையாரி மந்திரமூர்த்தி இருவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்யக்கோரி, சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் தலைமையில் ஆரைக்குளம் பகுதி மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து பெர்டின் ராயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் வழங்க வேண்டிய இலவச பட்டாவை விஏஓ மற்றும் தலையாரி இருவரும் தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுத்துள்ளனர். இது போன்று பத்து பட்டாக்கள் விதிமீறிகள் மீறி வழங்கப்பட்டுள்ளன. இந்த இலவச பட்டாவை நத்தம் பட்டவாக மாற்ற 20 ஆண்டுகள் தேவை என்று விதிமுறை இருந்தும்; இவர்கள் ஒரே ஆண்டில் மேலப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தூய நத்தம் பட்டாவாக மாற்றியுள்ளனர்.
தற்போது அந்த இடத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றியுள்ளனர். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்’ என்று தெரிவித்தார்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச பட்டாவை அரசு அலுவலர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது குடும்பத்தினருக்கு வழங்கிய சம்பவம், சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராகுல்காந்தி நடைபயணத்திற்கு சர்வ வசதிகளுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வருகை