திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறும்போது, தமிழ்நாட்டில் பனை மரங்களை பாதுகாக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் பனை மரங்களை பாதுகாக்க, அதனை வெட்டுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் எனவும், சுனாமியின்போது சாயாத ஒரே மரம் பனை மரம்தான் என்றும் பெருமையாக கூறினார்.
Also read: 'பனங்கிழங்கை இலவசமாக வழங்கும் முதியவர்' - மதுரையில் ஒரு பனை காதலர்
அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, ஆண்டுக்கு ஒரு லட்சம் பனை விதைகளை தனது சார்பாக வேளாண் துறைக்கு தருவதாக கூறினார். அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (செப். 14) 50 ஆயிரம் பனை விதைகளை சென்னை வேளாண் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், நேற்று (செப். 16) சபாநாயகரின் சொந்த ஊரான பணகுடி லெப்பை குடியிருப்பில் இருந்து லாரியில் 50 ஆயிரம் பனை விதைகளை ஏற்றி, சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பனை விதைகளை வேளாண் துறை எப்போது கேட்டாலும், தான் அனுப்ப தயாராக உள்ளதாகவும், இதன்மூலம் பனை மரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.