திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கரோனா மூன்றாம் அலையான புதிய வகை ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, ஜன.9ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூன்றாவது வாரமாக இன்றும் (ஜன.23) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர இதர காரணங்களுக்காக வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்களை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி மாநகர காவல் துறை சார்பில், மாநகர் முழுவதும் 7 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சுமார் 400 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இதுதவிர 18 இருசக்கர வாகனங்களிலும், 8 நான்கு சக்கர வாகனங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மாநகரில் கேடிசி நகர், வண்ணாரப்பேட்டை, கொக்கிரக்குளம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் பேரிகார்டர் அமைத்து தேவையில்லாமல் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர். உரிய காரணங்கள் இல்லாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து வருகின்றனர்.
அதேசமயம் மருத்துவமனை செல்கிறேன், மெடிக்கல்களில் மருந்து வாங்க செல்கிறேன் என ஏதாவது ஒரு அத்தியாவசிய காரணங்களை கூறிக்கொண்டு ஏராளமான வாகன ஓட்டிகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர்.
திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் அழைப்பிதழை காட்டி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று(ஜன.23) முகூர்த்த நாள் என்பதால் மநாகர பகுதியில் பல்வேறு திருமணங்கள் நடைபெறுகிறது எனவே திருமண வீட்டிற்கு செல்பவர்கள் உரிய அழைப்பிதழை காண்பித்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து காவல்துறையினர் முக்கிய சாலைகளை கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு ரத்தா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்