நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த சுப்பையாபுரத்தை சேர்ந்த சசிகுமார் என்ற விவசாயி, நேற்று முன்தினம் (24-4-2022) அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், பாலமுருகனின் தந்தை அழகுபாண்டியன் நெல்லை மாநகர காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. அழகுபாண்டியனுக்கும், கொல்லப்பட்ட சசிகுமாருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக ஏற்பட்ட முன்பகை காரணமாகவே அழகுபாண்டியன், தனது மகன் பாலமுருகன் மூலம் சசிகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அழகுபாண்டியன், பாலமுருகன் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கில் கைதான காவல் உதவி ஆய்வாளர் அழகுபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ள அழகுபாண்டியனே, நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட பகையில் கொலை செய்தது, நெல்லை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை - தனி நீதிமன்றம் தீர்ப்பு