திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2018, 2019 மற்றும் நடப்பாண்டில் காணாமல் போன 114 செல்ஃபோன்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 13 லட்சத்து 8 ஆயிரத்து 797 ரூபாய் ஆகும். மீட்கப்பட்ட இந்த செல்ஃபோன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு செல்ஃபோன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” 114 செல்ஃபோன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. செல்ஃபோன் விற்பனை கடைகளில் திருட்டு செல்ஃபோன்களை அடையாளம் காண்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாவட்டத்தில் மணல் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்ட 117 பேர் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், 2,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன “ என்றார்.
இதையும் படிங்க: டிக்டாக் காணொலிகளில் மோசடி: 5 பேர் மீது வழக்குப்பதிவு!