நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழையில், நெல்லை டவுன் அபிராமி நகர், தடி வீரன் கோயில் தெரு, வெள்ளம் தாங்கிய விநாயகர் கோயில் கிருஷ்ண பேரி, பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத் நகர், சேவியர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது .
இந்நிலையில் மழை சேதம் தொடர்பாக ஆய்வு நடத்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் செல்வி அபூர்வா இன்று (நவ.28) நெல்லை வந்தார். தொடர்ந்து நெல்லை டவுன் தடி வீரன் கோயில் தெரு, காட்சி மண்டபம், கிருஷ்ண பேரி உள்ள குளம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் செல்வி அபூர்வா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”எதிர்பாராவிதமாக பெய்த பலத்த மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ள நீர் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பல கால்வாய்கள் மணல் நிரம்பியதால் கால்வாயில் செல்லக்கூடிய தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. ஆனால் அரசிடம் இருந்து இந்த கால்வாய்களை தூர்வாருவதற்காக போதிய நிதி இல்லை.
தொடர் மழையாலும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளாலும் சாலைகள் சேதமாகியுள்ளது. நவம்பர் - டிசம்பர் மழைக்காலம் முடிந்தவுடன் அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது போர்க்கால அடிப்படையில் தற்காலிகமான சாலைகள் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் சேதம் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முழுவதும் கணக்கிடப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்” என்றார்.
இந்நிலையில் நெல்லை டவுனின் பல பகுதிகளில் பொதுமக்கள் கண்காணிப்பு அலுவலர் செல்வி அபூர்வாவிடம் தங்கள் புகார்களை தெரிவிக்க வந்தனர். ஆனால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்பு அலுவலரை அழைத்துச் செல்லாமல் சிறிய அளவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அவரை அழைத்துச் சென்றதால், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்
வரி உள்பட பல்வேறு வழிகளில் தமிழ்நாடு அரசு அதிக வருவாய் ஈட்டும் மாநிலமாக இருந்து வரும் சூழ்நிலையில், சாதாரணமான குளங்களை சீரமைக்க அரசிடம் நிதி இல்லை என்றும், அதனால்தான் நெல்லையில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலர் வெளிப்படையாகக் கூறிய சம்பவம் சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனதின் குரல்: ராணுவ வீரர்களின் தாய்மார்களை நினைவுகூர்ந்த பிரதமர்!