அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள கம்யூ., கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை 10ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், ஜுன் 29 ஆம் தேதி நெல்லை சந்திப்பு தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தோம். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இந்த ஜனநாயக நாட்டில் மக்களை தங்களின் உரிமைக்காகப் போராட விடாமல் தடுக்கும், இம்மக்கள் விரோத செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குடிமக்களின் பாதுகாவலர்களான காவல்துறையினர், மக்களின் அடிப்படை உரிமைகளைக் குறித்து கற்று, தெரிந்து வைத்திருக்க வேண்டுகிறேன்.
கூடங்குளம் அணு உலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - சுப உதயகுமார்
இப்போராட்டம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவோம், அல்லது தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம், அல்லது நீதிமன்றத்தை நாடுவோம். அணுக் கழிவின் அழுத்தத்தைக் கண்காணிக்கும் உணர்கருவிகள் (சென்சார்கள்) இரண்டு ஆண்டுகளாகச் செயல்படவில்லை என வெளிநாட்டுப் பத்திரிக்கை ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. இப்படியான பிரச்னைகள் இருப்பதால், கூடங்குளம் அணு உலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ‘கூடங்குளம் சென்று பார்த்தேன்; எந்தவிதமான ஆபத்தும் இல்லை’ என்று கூறுகிறார். ஆனால் அவரது கட்சி தொண்டர்கள் அணுக்கழிவு மையம் அமையக் கூடாது என அவரிடமே மனு அளிக்கின்றனர். அவர்களது நிலைப்பாடு என்ன என்பது அணுக்கழிவு மேலாண்மை போன்று தெளிவாக இல்லை. நாடாளுமன்ற விவாதங்களில் கூட அணுக்கழிவு குறித்து உண்மையான தகவல் தெரிவிக்கவில்லை’ என்று கூறினார்.