திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், வசவபுரம் அருகே நாணல்காடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து ஆற்றில் பல மணி நேரம் தேடியும் முதியவரை மீட்க முடியவில்லை.
இதற்கிடையில் அப்பகுதி பொதுமக்கள், சில கிலோ மீட்டர் தூரத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சடலமாக கிடந்த அந்த முதியவரின் உடலை மீட்டனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் நாணல்காடு பகுதியைச் சேர்ந்த அழகிய பூ வேளாளர் (84) என்பதும், இன்று (ஜன.21) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடந்த வாரம் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் குளிப்பதால் ஆபத்து நேரிடும் என மாவட்ட நிர்வாகம் பலமுறை எச்சரித்தும், பலர் அலட்சியமாக உள்ளனர். அப்படியான அலட்சியத்தால் முதியவர் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகியிருக்கிறார்.
இதையும் படிங்க: கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர் : குடிநீருக்காக தவிக்கும் மக்கள்