திருநெல்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 100 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் 2500 ரூபாய் வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பணம் வழங்கப்பட்டது.
ஆனால் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு பணம் கொடுக்காமல் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் வழங்கக் கோரி இந்து தேசிய கட்சி சார்பில், மண்பானை உடைக்கும் நூதன போராட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதையொட்டி அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமையில் கையில் மண்பானையுடன் வந்த நிர்வாகிகள், பொங்கலோ பொங்கல் ஏமாற்று பொங்கல், தமிழ்நாடு அரசே ஏமாற்றாதே ஏமாற்றாதே எனக் கண்டன கோஷம் எழுப்பினர். பின்னர் கையில் இருந்த பானையை கீழே போட்டு உடைத்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது குறித்து சங்கர் கூறுகையில், “கடந்த ஆட்சியில் பொங்கலுக்கு 2,500 ரூபாய் வழங்கினர். ஆனால் தற்போதைய அரசு பணம் வழங்காமல் மக்களை ஏமாற்றிவருகிறது. மண்பானை வாங்கக்கூட வழியில்லாமல் மக்கள் வறுமையில் உள்ளனர். எனவே அரசு உடனடியாக அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும்” என்றார்
இதையும் படிங்க: Tamil Nadu Jallikattu Youth Council: கோவை ஜல்லிக்கட்டில் முறைகேடு எனப் புகார்