திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா இந்து மத கடவுள் குறித்தும், நாட்டின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் இழிவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
15 நாள் சிறை
பாஜக, பல்வேறு இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை காவல்துறையினர் விருதுநகர் கள்ளிப்பட்டியில் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், அவருக்கு கன்னியாகுமரி குளித்தலை நீதிமன்றம் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கியது. இதையடுத்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 24) அடைக்கப்பட்டார்.
பாதிரியார் கோரிக்கை
சிறைக்குள் சென்ற சில நிமிடத்தில் பாதிரியார் பொன்னையா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து, காவலர்கள் அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் தனக்கு சிறை மருத்துவமனை வசதியாக இல்லாததால் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கோரி சிறை கண்காணிப்பாளருக்கு பாதிரியார் பொன்னையா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வெளியே விட மாட்டோம்
இருப்பினும் சிறை விதிகளின்படி சிறை மருத்துவமனையில் இருந்து கைதிகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் சிறை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும்.ஆனால், பாதிரியார் பொன்னையாவை மேல் சிகிச்சைக்கு வெளியே அழைத்துச் செல்ல, இதுவரை சிறை மருத்துவர்கள் தரப்பில் எந்த ஒரு சான்றும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பாதிரியார் பொன்னையாவிற்கு தொடர்ந்து சிறை மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிறை மருத்துவமனை வேண்டாம், தன்னை உடனடியாக வெளியே அழைத்து செல்லுங்கள் என்று பாதிரியார் பொன்னையா சிறை அலுவலர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜார்ஜ் பொன்னையாவை வெளியே அழைத்து செல்லக் கூடாது என்பதில் சிறை நிர்வாகம் திட்டவட்டமாக உள்ளது. அதேசமயம் அவரின் உடல்நலம் கருதி அரசு மருத்துவமனையில் இருந்து இதய நோய் பிரிவு மருத்துவர்களை சிறைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பரிந்துரை கடிதத்தை சிறை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.