ஜார்க்கண்ட் மாநிலம், கார்வா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் ரவி (24). இவர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் தனியார் அலைபேசி நிறுவன நெட்வொர்க் பிரிவில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி விஷபூச்சி கடித்து சந்தோஷ் குமார் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். சந்தோஷ் குமார் வெளிமாநிலத்தவர் என்பதால், அருகிருந்து கவனிக்க உறவினர்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார். இதனையடுத்து, ஜார்க்கண்ட்டில் உள்ள தனது சகோதரர் பபின் குமார் ரவிக்கு சந்தோஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பபின் குமார் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ட்விட்டர் பக்கத்தில் நிலைமையைச் சொல்லி உதவி கோரியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் பக்கத்தில் உதவிக் கோரியதையடுத்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சந்தோஷ் குமாருக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து விசாரித்ததோடு உரிய சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஜார்க்கண்ட் முதலமைச்சரின் ட்விட்டர் வாயிலாக, சந்தோஷ் குமாருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சையளித்து வருவதாகவும், அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் பதில் அளித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கரோனா மாதிரியான இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் ட்விட்டரில் கோரிக்கை வைத்தாலும்; அதை உடனடியாக முதலமைச்சர் நிறைவேற்றுவது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு ஒரு பக்கம்... பசியால் வாடும் ஆதரவற்றோர் மற்றொரு பக்கம்...! உதவிக்கரம் நீட்டுமா அரசு?