திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று(ஜூன் 21) மாலை நிலவரப்படி 680 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 322 பேர் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் ஆவர். குறிப்பாக ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
அதேசமயம் கடந்த சில நாள்களாக இறப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரம்பத்தில் கடந்த மே மாதம் வரை கரோனா தொற்றால் ஒரு நபர் மட்டுமே உயிரிழந்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த மாதம் தொடக்கத்தில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
பின்னர் கடந்த ஜூன் 19 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை ஊழியர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த சூழ்நிலையில் இன்று(ஜூன் 22) மேலும் ஒரு முதியவர் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இந்த முதியவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.