திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோயில், நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் ஆலயம் ஆகும். இக்கோயிலின் ஆவணி மூலத்திருநாள் கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் இந்தத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சிகொடுத்து சாபவிமோசனம் பெறும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
முன்னதாக இரவில் கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோயில் வாசலில் நின்று, நெல்லையப்பரை அழைக்க, சித்தாின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக, நெல்லையப்பர் செவிசாய்க்காமல் இருக்கிறார். இதனால், கோபமடைந்த சித்தர் 'எருக்கு ஏழுக ஈசன் இங்கு இல்லை' என சாபம் கொடுத்துவிட்டு, நெல்லையை அடுத்த மானூர் அம்பலவாண சுவாமி கோயிலுக்கு வந்தாா்.
அங்கு பேரொளியாய் நெல்லையப்பர் காட்சி கொடுத்ததால் மகிழ்ந்த சித்தர், தனக்கு காட்சி கொடுத்த ஆவணி மூலத் திருநாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் காட்சி தர இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.
அதன்படி ஆவணி மூலத்திருநாளின் 10ஆவது நாளான நேற்று இரவு கருவூர் சித்தரை அழைத்துவர சுவாமி சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா சண்டிகேஸ்வரர், தாமிரபரணி அம்பாள், அகஸ்தியர், குங்கிலிய நாயனார் ஆகியோா் பல்லக்கில் நெல்லையப்பர் கோயிலில் இருந்து மானூர் அம்பலத்திற்கு எழுந்தருளினர்.
மானூர் அம்பலத்தெருவில் சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து திருக்கோயில் அம்பலத்தில் அடிக்கு ஆயிரம் பொன் கொடுப்பதாகக்கூறி, கருவூர் சித்தரை திருநெல்வேலிக்கு அழைக்கும் திருவிளையாடல் ஓதுவாமூர்த்திகளால் பாடப்பட்டது.
நெல்லையப்பர் தரிசனம் பெற்ற கரூர் சித்தர் தன் சாபத்தை திரும்ப பெற்றுக்கொண்டார். இத்திருவிழாவில் பக்தா்கள் குடும்பத்துடன் சுவாமி தாிசனம் செய்தனா்.
இதையும் படிங்க: 106ஆவது பிறந்தநாள் கண்ட கிருஷ்ணம்மாள் பாட்டி... கிடா விருந்தளித்த பேரன், பேத்திகள்!