நெல்லை மாநகரின் மையப்பகுதியான தாமிரபரணி நதிக்கரையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 26) நள்ளிரவு நேரத்தில் காட்டெருமை ஒன்று வீதியில் சுற்றுவதாக ரோந்துப்பணியில் இருந்த காவல்துறையும் வனத்துறை அலுவலர்களுக்குத்தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனத்துறையினர், காவல் துறையினர் இணைந்து காட்டெருமையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆட்கள் நடமாட்டத்தைக் கண்ட காட்டெருமை ஆட்சியர் அலுவலக வளாகம், தாமிரபரணி ஆற்றை ஒட்டிய புதர் மண்டிய பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தொடர்ந்து அதனைப்பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், காட்டெருமை வந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தாமிரபரணி நதிக்கரை பகுதிக்குச்சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். நகர்ப்பகுதியில் வீடுகள் அதிகம் நிறைந்த இடத்தில் காட்டெருமை வந்தது எப்படி என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டெருமை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மத்தியப்பிரதேசத்தில் உயரும் புலிகளின் உயிரிழப்பு - மறுக்கும் ம.பி. வனத்துறை அமைச்சர்!