நெல்லை: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர், தூத்துக்குடி மாவட்டம் சாயல்புரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த 29ஆம் தேதி பாலசுப்பிரமணியன் கேடிசி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றார்.
அப்போது ஏடிஎம்மில் பணம் வராததால், அவருக்கு பின்னால் வந்த நபர் ஒருவர் தான் பணம் எடுத்துத் தருகிறேன் என்று கூறி பாலசுப்பிரமணியத்தின் கார்டை வாங்கியுள்ளார். பின்னர் தன்னாலும் பணம் எடுக்க முடியவில்லை எனக்கூறி கார்டை திருப்பி கொடுத்துள்ளார். இதையடுத்து பாலசுப்ரமணியன் வீட்டுக்கு திரும்பிவிட்டார்.
நேற்று(ஜூன் 5) வங்கிக்கு சென்று தனது கணக்கை சரிபார்த்தபோது, அவரது கணக்கில் இருந்த சுமார் 5 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது ஏடிஎம் கார்டை பார்த்த பாலசுப்பிரமணியத்திற்கு உண்மை புரிந்தது. ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாகக் கூறிய நபர், பாலசுப்ரமணியத்தின் கார்டை வாங்கிக்கொண்டு அதற்கு பதில் அவரது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார்.
பிறகு, பாலசுப்ரமணியத்தின் கார்டை எடுத்துச்சென்று, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் பணம் எடுத்துள்ளார். நகைக்கடைகளில் நகைகளை வாங்கியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் பாலசுப்ரமணியன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இந்தப் புகாரை நெல்லை மாநகர சைபர் காவல் துறைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளையடிக்க கற்றுத் தந்தது யார்? - காவல் துறையினர் விசாரணை