நெல்லை: கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
சாந்தினி என்பவர் அளித்த மனுவில், நெல்லை சந்திப்பில் சீதாபதி ராமசுதர்சன் என்பவருக்கு சொந்தமாக இயங்கி வரும் ஹிந்துஸ்தான் அக்ரி லிமெடெட் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் ஐந்து ஆண்டுகள் கழித்து இருமடங்காக திருப்பி கொடுக்கப்படும் என்று தனக்கு நன்கு அறிமுகமான அந்நிறுவன மேலாளர் சுரேஷ் தெரிவித்தார்.
5 வருடத்தில் ரூ.1.50 கோடி
அதை நம்பி தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் சுமார் ஒன்றரை கோடி வரை பணம் வசூல் செய்து மேற்கண்ட நிறுவனத்தில் கட்டினேன்.
பணம் கட்டும்போது, ஐந்து வருடம் கழித்து பணத்தை இருமடங்கு லாபத்துடன் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஆசைவார்த்தை கூறியதாகவும், ஆனால் ஐந்து வருடம் முடிந்த பின் பணத்தைத் திரும்பக் கேட்ட போது பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே,ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த, சீதாபதி ராம சுதர்சன் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர்கள், மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து வழக்கறிஞர் பேச்சிமுத்து கூறுகையில், ஹிந்துஸ்தான் அக்ரி நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஐந்து வருடம் 60 லட்ச ரூபாய் செலுத்தினால் 5 ஆண்டுகள் கழித்து இருமடங்காக ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் தருவதாகக் கூறி, கேரளாவில் பல கிளைகளை நிறுவி ஏழை மக்களிடம் பணம் வசூலித்தனர்.
ரூ.30 கோடி மோசடி
இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் முகவர்கள். இவர்கள் சுமார் 1,500 பேரிடம் ரூ.30 கோடி வரை வசூல் செய்து மேற்கண்ட நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர். ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகும் பணத்தைக் கொடுக்காமல் அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, ஹிந்துஸ்தான் அக்ரி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ரஷ்யருக்கு 18 ஆண்டுகள் சிறை...!