திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று(செப் 14) மாலை ஒரு நபர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற நபர் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர் நவநீதகிருஷ்ணன் என்பதும், அவருக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காத விரக்தியில் இதுபோன்ற தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. அதாவது தனது பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தபோது அவரை பார்க்க உள்ளே அனுமதிக்காததால் நவநீதகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை முயன்றுள்ளார்.
தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் நவநீதகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், எனக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் குடும்பம் நடத்த முடியவில்லை. அதனால் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து நவநீதகிருஷ்ணனுக்கு ஏன் சம்பளம் வழங்கவில்லை என்பது குறித்தும் அவரது வேலையில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.