திருநெல்வேலி: கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம் மற்றும் லாரி கிளீனரான மற்றொரு முருகன், ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள இரண்டுபேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இரண்டு பேரில் நேற்று பிற்பகல் ஒருவர் அடையாளம் காணப்பட்ட போதிலும்; அவரை ராட்சத பாறைகள் சூழ்ந்து இருந்ததால் உடனடியாக மீட்க முடியவில்லை. இதையடுத்து நேற்று இரவு மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், இன்று(மே18) இரும்பு ரோப்களை கொண்டு அந்த நபரைச் சுற்றியுள்ள கற்கள் அகற்றப்பட்டு மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தற்போது ஐந்தாவது நபராக செல்வகுமார் என்பவர் மீட்கப்பட்டுள்ளார். இவர் ஹிட்டாச்சி ஆப்ரேட்டர் ஆவார். செல்வகுமாருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. எனவே, தனது கணவரை பத்திரமாக மீட்டுத் தரும்படி அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இன்னும் ராஜேந்திரன் என்பவரை மட்டும் இந்த விபத்தில் மீட்க வேண்டியுள்ளது. ஆனால் இதுவரை அவர் இடிபாடுகளில் அடையாளம் காணப்படவில்லை எனத்தெரிகிறது. இரவு நேரம் என்பதால் தற்போது மீட்புப்பணியினை தற்காலிக நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து நாளை காலை மீண்டும் ராஜேந்திரனை மீட்கும் பணிகள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் - ஸ்டாலின் அறிவிப்பு