திருநெல்வேலி: மனோன்மணியம் பல்கலைகழகத்தில் 'பெரியாரும் இஸ்லாமும்' சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் சமூக விலக்கல் மற்றும் ஆட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்துடன் இணைந்து 'பெரியாரும் இஸ்லாமும்' என்ற தலைப்பில் நாளை மறுதினம் (அக்டோபர் 27) பகுத்தறிவு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அகமது சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சொற்பொழிவாற்ற இருந்த நிலையில், இந்து முன்னணியினர் திடீரென இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்து முன்னணி மிரட்டல்
'பல்கலைக் கழகமா அல்லது திராவிடர் கழகமா' என கேள்வியெழுப்பி, பல்வேறு விமர்சனங்களை இந்து முன்னணியினர் முன்வைத்தனர். இந்து முன்னணியின் மிரட்டல் காரணமாக மேற்கண்ட சொற்பழிவு நிகழ்ச்சியை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தயக்கம் காட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்டபோது, சில பாதிப்புகள் ஏற்படும் என்பதால் நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும், நடத்த வேண்டாம் என்பது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என நேற்று (அக்டோபர் 24) தெரிவித்திருந்தார்.
இருப்பினும் தமிழ்நாடு அரசால் சமூகநீதி நாள் கடைபிடிக்கப்படும் ஒரு தலைவரின் பெயரில் நிகழ்ச்சி நடத்த பல்கலை நிர்வாகம் அஞ்சியது, சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கல்வியாளர்கள் கண்டனம்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப உதயகுமார், "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர் கழக அலுவலகமா? ஐஎஸ் பயிற்சி கூடாரமா? என்றெல்லாம் உருட்டி மிரட்டி, ஓர் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தடுக்க முயலும் இந்து முன்னணி பாசிஸ்டுகளை வன்மையாக கண்டிப்போம்! பல்கலைக்கழக நிர்வாகமே முதுகெலும்புடன் செயல்படு!" என்று பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தளத்தில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக தற்போது இந்து முன்னணியின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 'பெரியாரும் இஸ்லாமும்' தொடர்பான சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்த துணைவேந்தர் பிச்சுமணி சமூகவியல் துறைக்கு அனுமதி அளித்துள்ளார்.
இதனிடையே சொற்பொழிவு நடத்தினால் அக்டோபர் 27ஆம் தேதி காவிகள் நாம் பல்கலைக்கழகத்தில் அணி திரள்வோம் என இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. எனவே, அன்றைய தினம் பல்கலைக்கழகத்தில் காவல் பாதுகாப்பு கோருவது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மனோன்மணியம் பல்கலைக்கழகமே முதுகெலும்புடன் செயல்படு! - சு.ப. உதயகுமார்